உள்ளூர் செய்திகள்
காரிமங்கலம் அருகே 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 10 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்பு துறை அதிகாரி மற்றும் வருவாய்த்துறையினர் காரிமங்கலம் பைபாஸ் சாலையில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அகரம் பிரிவு ரோடு அருகே வேகமாக சென்ற டெம்போவை நிறுத்தி சோனையிட்டனர். அப்போது அதில் சட்ட விரோதமாக ரேசன் அரிசி மூட்டை, மூட்டையாக கடத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரிமங்கலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் ரேசன் அரிசியை சேகரித்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் சபீர் (வயது38) பிலால் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் டெம்போவில் இருந்த 10.50 டன் எடையுள்ள 110 அரிசி மூட்டைகள் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்தனர்.