உள்ளூர் செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

2 ஆண்டுகளில் தெலுங்கானா, புதுவையில் கவர்னரின் சாதனைகள்- சென்னையில் நாளை தமிழிசை வெளியிடுகிறார்

Published On 2022-04-18 12:08 IST   |   Update On 2022-04-18 12:08:00 IST
2 வருடத்தில் தெலுங்கானாவில் கவர்னர் ஆற்றிய பணிகள் பற்றிய புத்தகத்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஐதராபாத்தில் தமிழிசை வெளியிட்டார்.
சென்னை:

தெலுங்கானா மாநில கவர்னராகவும், புதுவை மாநில பொறுப்பு கவர்னராகவும் இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா முதல்- மந்திரியுடன் தொடரும் மோதல் காரணமாக மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

தெலுங்கானா தனி மாநில பிரிவினைக்காக முதல்-மந்திரி சந்திரசேகர ராவுடன் இணைந்து போராடியவர் முன்னாள் மந்திரி எட்டலா ராஜேந்திரன். பிற்பட்டோர் சமுதாயத்தில் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கும் அவர் தெலுங்கானாவில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார்.

கட்சியிலும், ஆட்சியிலும் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் அதிகரித்ததால் எட்டலா ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.

அதை தொடர்ந்து கவர்னர் பரிந்துரைப்படி நியமிக்கப்படும் 3 எம்.எல்.சி. பதவிக்கு சந்திரசேகரராவ் பட்டியல் அனுப்பினார். அதில் ஒருவர் மீது வழக்குகள் இருந்ததால் அவரது நியமனத்துன்னு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட உரசலும் விரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. 2 வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் பழங்குடியினர் திருவிழாவுக்கு அரசின் சார்பில் அழைப்பு விடுத்தனர். நக்சலைட்டுகள் உள்ள பகுதி என்பதால் ஹெலிகாப்டரில் செல்வார்கள். ஆனால் தமிழிசைக்கு அரசு கடைசி வரை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் சென்றார். விழாவுக்கு சென்றபோது அங்கிருந்த கலெக்டர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஒருவர்தான் கவர்னர் தமிழிசையை வரவேற்றார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தொடர்ந்த மோதல் இப்போது வரை நீடிக்கிறது. இந்த நிலையில் 2 வருடத்தில் தெலுங்கானாவில் கவர்னர் ஆற்றிய பணிகள் பற்றிய புத்தகத்தை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஐதராபாத்தில் தமிழிசை வெளியிட்டார்.

நாளை (19-ந் தேதி) கிண்டி நட்சத்திர ஓட்டலில் அந்த புத்தகத்தை வெளியிடுகிறார். மேலும் 100 நாட்களில் புதுவையில் செய்த சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் வெளியிடுகிறார்.

தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றதும் ராஜ் பவனை மக்கள் பவனாக மாற்றும் வகையில் மக்களுடனான தொடர்புக்கு ஏற்பாடு செய்தார். ராஜ்பவன் வாசலில் குறைதீர்க்கும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிகின்றன. அதற்காக தனி அதிகாரியை நியமித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

10 ஆண்டுகள் பட்டா மாற்ற முடியாமல் தவித்தவர் மனு போட்டதால் 2 நாட்களில் பட்டா பெற முடிந்தது. கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு படிக்க லேப்-டாப் இல்லை என்று மனு செய்திருந்தார். அவருக்கு கவர்னர் நிதியில் லேப்-டாப் வாங்கி கொடுத்தார். அத்துடன் ஐ.டி. நிறுவனங்கள் கூட்டத்தை கூட்டி பயன்படும் நிலையில் உள்ள கம்ப்யூட்டர்களை ஏழை கல்லூரி மாணவர்களுக்கு வழங்க கேட்டுக்கொண்டார். அதன்படி சுமார் 600 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை நடத்தி ஆரோக்கிய ரெக்கார்டுகளை கல்லூரிகளில் பராமரிக்க செய்தார். காலியாக இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களையும் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இவ்வாறு மாநிலத்தில் செய்த பணிகள் பற்றிய விவரம் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Similar News