அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்த படைப்பாற்றல் மையம்- விரைவில் உருவாக்கப்படுகிறது
சென்னை:
அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில் முனைவோர் திறனை வளர்த்து கொள்ள படைப்பாற்றல் மையம் அல்லது சிந்தனை சாலை விரைவில் தொடங்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக காரைக்குடி, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளிலும், மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியிலும் இந்த மையம் நிறுவப்படும் என்றும் பின்னர் மற்ற அரசு கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த பயிற்சி மையம் மாணவர்களுக்கு போதுமான வசதிகளுடன் கூடிய தளத்தை வழங்கும். மாணவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இது செயல்படும். புதுமையான யோசனை உருவாக்கி அவற்றை தயாரிப்புகளாக மாற்ற முடியும். முன் மாதிரிகள், சோதனை மாதிரிகள், அறிவார்ந்த இன்டர்நெட் சிந்தனை, இயக்கப்பட்ட சாதனங்களை உருவாக்குதல், மாணவர்களின் சிந்தனைகளை சரியான திசையில் செலுத்த ஆசிரியர் மற்றும் தொழில் வல்லுனர்கள் உதவுவார்கள்.
மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கான வாய்ப்பை பெறுவார்கள். புதுமையான, சிக்கல் தீர்க்கும் யோசனைகளை யதார்த்தமாக மாற்றுவதில் இந்த மையம் அடித்தளமாக விளங்கும். மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை பயன்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மாணவர்கள் தங்கள் சொந்த முன் மாதிரிகளை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மென்பொருளை உருவாக்கி சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்கும் ஆய்வகமாக இது விளங்கும்.
அனைத்து துறை மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் தங்கள் திட்டங்களில் பணிபுரியும் வகையில் போதுமான வசதிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் இந்த மையம் தயாராகி விடும். இது மாணவர்களை சரியான வழிகாட்டுதலுடன் பயணிக்க உதவும்.