உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

ஆனைமலை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்

Published On 2022-04-18 10:00 IST   |   Update On 2022-04-18 10:00:00 IST
ஆனைமலை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனைமலை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து ரமணமுதலிபுதூர் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து ரமணமுதலி புதூருக்கு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் தண்ணிமடம் வளைவில் சென்றபோது பஸ்சின் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டது.

இதையடுத்து பஸ்சை இயக்கி வந்த டிரைவர் அருண்பிரகாஷ் என்பவர் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

உடனே டிரைவர் சம்பவம் குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தண்ணிமடம் அருகே பஸ் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் திடீரென பஸ் மீது கல் எறிந்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் அக்கம்பக்கம் உள்ள கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News