உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Published On 2022-04-18 02:38 GMT   |   Update On 2022-04-18 06:39 GMT
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்ற தீனதயாளன், வரும் 27-ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார்.
சென்னை:

மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) உயிரிழந்தார். 

83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. 

இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. 

அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலியானதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டுப் பிரிந்தது வேதனை. கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News