உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகத்தின்போது கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-04-17 09:33 GMT
நெற்குப்பை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் திருப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பழமையான இந்த கோவில் புனரமைத்து புதிதாக ராஜகோபுரம் மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு விமானங்கள் கட்டி முடித்து திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக கோவில் அருகே பிரமாண்ட யாக சாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்து புண்ணியாக பூஜையுடன் யாக பூஜை கள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகங்கள் நடைபெற்று நிறைவாக யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மஹா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.

 இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து ராஜகோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விமானம் கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விமானக் கலசத்திற்கு பட்டு வஸ்திரம் பூ மாலைகள் சாற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 

பின்னர் மூலவர் வெங்கடாசலபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. கும்பா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ராமசெல்வம் செட்டியார், ரத்தினம் செட்டியார், சிங்காரம் செட்டியார் ஆகியோர் செய்து இருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில், நாட்டார், நகரத்தார்கள் நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந் திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் காவலர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News