உள்ளூர் செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே நள்ளிரவில் மின்கம்பத்தில் வாகனம்மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். முள்ளோடை பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்தபோது தனியார் திருமண மண்டபத்திற்கு அருகில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மின் கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் மின்கம்பம் சாய்ந்து மின் வயர் அறுந்து விழுந்தது. இந்த தகவல் அறிந்த ரோந்து போலீசார் மணிவண்ணன், ஹரி, பழனிச்சாமி, ஞானமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருள் சூழ்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மின் வயர்கள் ரோட்டில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விபத்தை தவிர்க்க புதுவை-கடலூர் சாலையில் செல்லும் வாக-னங்களை இருபுறமும் தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி போக்குவரத்து போலீசார் மற்றும் மின்துறை ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் கடலூர்-புதுவையில் இருந்து வந்த வாகனங்களை பாகூர் வழியாக திருப்பி மாற்று வழியில் அனுப்பினர்.சம்பவ இடத்திற்கு மின்துறை ஊழியர் ஒருவர் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் வயர்களை போலீசார் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி துண்டித்தார்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து மின் வினியோகம் செய்யப்பட்டது. மின் வயர் அறுந்து கிடந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக சென்று மாற்று ஏற்பாடு செய்த போலீ-சாருக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டினர்.