உள்ளூர் செய்திகள்
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
திருமருகலில் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் கீழத் தெருவை சேர்ந்தவர் சிவசண்முகம் மகன் மகேஸ்வரன் (வயது 35).இவர் முதுநிலை மருந்தாளுநர் படித்துள்ளார்.படித்து முடித்து இதுவரை வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி மகேஸ்வரனின் பெற்றோர் ஆண்டிபந்தலில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரன் வீட்டிலிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி திருமருகலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
மீண்டும் 15-ம் தேதி காலையில் மகேஸ்வரனுக்கு வயிற்றுவலி அதிகமாகி உள்ளது. இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்-பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.