உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கிய காட்சி.

திருச்செந்தூரில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

Published On 2022-04-16 15:28 IST   |   Update On 2022-04-16 15:28:00 IST
திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்-பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


அந்தவகையில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி இன்று திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பிருந்து  தொடங்கியது. 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், போட்டியை தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   

ஆண்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 14 கிலோ மீட்டர் அளவிலும் போட்டி நடைபெற்றது. 

திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு புறப்பட்டு காயல்பட்டணம், ஆறுமுகநேரி வழியாக மீண்டும் திருச்செந்தூர் வந்தடைந்தது.  

ஆண்களுக்கான பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்த ஆகாஷ் முதலிடத்தையும், ஊட்டியை சேர்ந்த நிகில் குமார் 2-ம் இடத்தையும், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த அஜித்குமார் 3-ம் இடத்தையும், ராஜபாளையத்தைச் சேர்ந்த மணிசரத் 4-ம் இடத்தையும் பெற்றனர். 

இதேபோல் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மதுரை கவிதா, 2-ம் இடத்தை சேலத்தைச் சேர்ந்த லதா,  3-வது இடத்தை கீதாஞ்சலி, 4-வது இடத்தை லாவண்யா ஆகியோர் பெற்றனர்.  

போட்டியில் முதல் பரிசாக ரூ. 1 லட்சமும்,  2-ம் பரிசாக ரூ. 50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 30 ஆயிரமும், 4-ம் பரிசாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்பட்டது. 

மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு  தலா ரூ. 5 ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Similar News