உள்ளூர் செய்திகள்
தீர்த்தக்குளத்தில் பலியானவர் உடலை மீட்டு வந்த காட்சி.

திருவண்ணாமலையில் தீர்த்த குளத்தில் மூழ்கி பலியானவர் உடல் மீட்பு

Update: 2022-04-16 09:50 GMT
திருவண்ணாமலையில் தீர்த்த குளத்தில் மூழ்கி பலியானவர் உடல் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை:

சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது40) கார்டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.வீரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரமணி புதுச்சேரி சென்று அங்கு வசித்து வந்தார். பின்னர் காவி ஆடைகள் அணிந்து சாமியார் போல இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது தம்பி நல்லையா என்பவரை சந்தித்து அவரையும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை அண்ணனும் தம்பியும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். 

அவர்கள் செங்கம் சாலையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளக்கரைக்கு சென்றனர். காலை 10 மணி அளவில் தீர்த்தகுளத்தில் குளிக்க சென்ற வீரமணி தண்ணீரில் மூழ்கி விட்டார். 

இதனைக்கண்ட தம்பி நல்லையா தீர்த்த குளத்தில் குதித்து அண்ணனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரால் வீரமணியை காப்பாற்ற முடியவில்லை. 

உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் மூழ்கி பலியான வீரமணி உடலை நேற்று பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதை தொடர்ந்து இன்று காலை மீன்வள உதவியாளர்கள் சரவணன், சிவக்குமார் உள்ளிட்டோர் சிங்கமுக தீர்த்த குளத்தில் இறங்கி வீரமணி உடலை சுமார் 30 நிமிடங்களில் மீட்டனர்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுபற்றி பலியான வீரமணியின் தம்பி நல்லையா கூறும்போது, நேற்று காலை நாங்கள் சிங்கமுக தீர்த்த குளத்திற்கு வந்தோம் எனது அண்ணன் வீரமணி சாப்பிட்டுவிட்டு குளிக்கச் சென்றார் அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும்.இருந்தபோதிலும் அவர் குளத்தில் மூழ்கி விட்டார். 

நானும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தேன் ஆனால் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை.24 மணி நேரத்திற்கு பின்னர் இன்று தான் அவரது உடலை மீட்டு உள்ளனர் என்றார்.

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக உள்ள நிலையில் தீர்த்த குளத்தில் ஒருவர் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News