உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 8-ந் தேதி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்து வந்தன. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
10-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் தேருக்கு எழுந்தருளல் மற்றும் தேர் பவனி சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் 10.35 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
சிறிய தேரில் மகா கணபதி, முருகப்பெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கரராமேசுவரர், பாகம்பிரியாள் அம்பாளும் ரதவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி முன்னிலையில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரைகள் அணிவகுத்து செல்ல, தொடர்ந்து களியல் ஆட்டம், சிவ தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்கள், மகளிர் கோலாட்டம், தேவார இன்னிசை யுடன் வேதபாரா யணம் பாடப்பபட்டது. மேலும் சிலம்பாட்டம், வாணவேடிக்கை, மாணவ, மாணவிகளின் வீர விளையாட்டுக்களும் நடந்தது.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளரும், மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார், தி.மு.க. பிரமுகர் கீதாசெல்வமாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.