உள்ளூர் செய்திகள்
முருகன்-வள்ளி, தெய்வாணைக்கு சிவகிரி ஆதீனம் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம்

Update: 2022-04-16 08:07 GMT
சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகிரி:

சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகிரியில் அமைந்துள்ள வேலாயுதசுவாமி கோவில் தேர் திருவிழாவானது ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும்.
தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு வேலாயுதசாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, அதைத்தொடர்ந்து சாமி  திருவீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடந்த 13-ந் தேதி காலை 7 மணிக்கு சாமி திருவீதி உலா, காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு 5 வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

14-ந் தேதி காலை 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் முருகன், வள்ளி தெய்வானை யுடன் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று காலை 7 மணிக்கு சாமி திரு வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வேலாயுதசாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடந்து நாளை  மாலை 6 மணிக்கு மீண்டும் தேர் இழுத்து வந்து தேர்நிலை சேர்த்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 18-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை நிகழ்வும், 19-ந் தேதி நடராஜர் மகாதரிசனம் நடைபெற உள்ளது.

அன்று மாலை 4 மணிக்கு நடராஜர் தேர் வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இரவு 8 மணிக்கு புதுக்கோட்டை இளைய ராஜாவின் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும்.

20-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவம், சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
Tags:    

Similar News