உள்ளூர் செய்திகள்
ஆம்புலன்சு கவிழ்ந்து பெண் உடல் நசுங்கி பலி
அந்தியூர் பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து பெண் பலியானார்.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து பெண் பலியானார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (30). இவரது மனைவி திவ்யா (23). நிறைமாத கர்பிணியான திவ்யாவுக்கு கடந்த 12-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திவ்யாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் அறிவுறுத்-தினார்.
இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்துக் கொண்டு விவேகானந்தன், அவரது தாய் மல்லிகா, பெரியம்மாள் அய்யம்மாள் (55), தவிட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஜோதிமணி (27) ஆகியோர் ஆம்புலன்சில் ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.
ஆம்புலன்சை அந்தியூரைச் சேர்ந்த மாபு பாஷா (21) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்சு அந்தியூர் அடுத்த பருவாச்சி பகுதியில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து விபத்தானது.
இதில் சம்பவ இடத்தி-லேயே அய்யம்மாள் உடல் நசுங்கி பலியானார். விவேகானந்தன், ஆம்புலன்சு டிரைவர் மாபு பாஷா, தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஆகியோருக்கு தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் விவேகானந்தனின் தாய் மல்லிகா மற்றும் குழந்தை ஆகியோர் சிறு காயம் கூட அடையாமல் தப்பினர்.