உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் கொண்டு வந்த சாக்குகளில் விளை பொருட்கள் எடை போடப்படுவதை படத்தில் காணலாம்

கள்ளக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சாக்குகளை மாற்றி எடை போட விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-04-14 17:02 IST   |   Update On 2022-04-14 17:02:00 IST
கள்ளக்குறிச்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள், மக்காச் சோளம், கம்பு, உளுந்து என ஆயிரத்துக்கும் அதிகமான தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில், கச்சிராபாளையம் சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது.

இந்த விற்பனை கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், எள் மக்காச்சோளம், உளுந்து, மணிலா, உள்ளிட்ட பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள், மக்காச் சோளம், கம்பு, உளுந்து என ஆயிரத்துக்கும் அதிகமான தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எடை போடும் போது ஒழுங்கு முறை விற்பனை கூட சாக்குகளில் பொருட்களை மாற்றி எடை போடுவது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாத‌ங்களாக ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சாக்குகளை மாற்றி எடை போடாமல் விவசாயிகள் எடுத்து வந்த சாக்குப் பைகளில் எடையை போடுகின்றனர். மீண்டும் அந்த விளை பொருட்களை கொள்முதல் செய்த வியாபாரிகள் விளை பொருட்களை கலத்தில் கொட்டிக்கொண்டு சாக்குகளை வழங்கும் வரை விவசாயிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது.

மேலும் பல விவசாயிகளுக்கு சாக்குகள் மீண்டும் கிடைப்பதில்லை என கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூட சாக்குகளில் மாற்றி எடை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News