உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திரம் போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. 100 டிகிரி அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடந்த 2 நாட்களாக காலை நேரம் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரம் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகின்றது.
குறிப்பாக ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பவானி அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
பவானி அருகே உள்ள மையிலம்பாடி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
இதேப்போல் நம்பியூர் பகுதியில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதேபோல் குருமந்தூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
புது சூரிபாளையம் அய்யன் கோவில் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வேப்பமரம் ஒன்று மெயின் ரோட்டில் சாய்ந்தது. உடனடியாக அந்த மரம் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.
இதேப்போல் மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பவானி, சத்தியமங்கலம், கொடிவேரி, தாளவாடி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: வரட்டுப்பள்ளம்-70, அம்மாபேட்டை-18.2, பவானி-16, சத்திய மங்கலம்-8, நம்பியூர்-8, கொடிவேரி-6, தாளவாடி-5, எலந்தகுட்டை-4.4.