உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் சுற்றுலா விடுதி கட்ட அரசு உதவி
புதுவையில் சுற்றுலா விடுதி கட்ட அரசு உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை திருவிழா தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:--
புதுவையில் 26 கி.மீ. தொலைவிற்கு மணற்பாங்கான கடற்கரை உள்ளது. சுற்றுலா பயணிகள் நகர பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் குவிந்து வருகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் கடற்கரையை விரிவு-படுத்துவது அரசின் கடமை. எனவே கடற்கரை சாலையில், வடக்கு பகுதியில் கடற்கரை நீளத்தை அரியாங்குப்பம், வீராம்-பட்டிணம் வரை சாலை, பாலம் அமைத்து நீட்டிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.
ஆன்மிக பூமியான புதுவையில் மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர் கோவில், கீழூர் உள்ளிட்ட வரலாற்று பெருமைமிக்க இடங்கள் உள்ளன.
இவற்றைகாணும் வகையில் இயக்கப்பட்ட பஸ்கள் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டன. லண்டனில் நகரங்களை சுற்றிப்பார்க்க பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதுபோல புதுவையில் பஸ்களை இயக்கி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கலாம் என கவர்னர் ஆலோசனை தெரிவித்தார்.
அனைத்து இடங்களையும் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்கும் வகையில் பஸ்களை இயக்க அரசு நிச்சயம் ஏற்பாடு செய்யும்.
சுற்றுலா பயணிகள் வந்து, தங்கி செல்வதற்கு வசதியாக தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.ஒரு கோடி அரசு மானியம் அளித்தது.
தற்போது கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப் படுவதால், தங்கும் விடுதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவியை அரசு செய்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.