உள்ளூர் செய்திகள்
கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி - 8000 நெல் மூட்டைகள் தேக்கம்
ஆதமங்கலம் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் 8000 நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே ஆதமங்கலத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணி கடந்த 5-ம் தேதி முடிவுற்ற
நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளது.
இரண்டு தினங்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்யும் மழையினால் நெல் மூட்டைளை மூடுவதற்கு போதுமான தார்ப்பாய் இல்லை எனவும் இருக்கும் தார்பாய்கள் கிழிந்த
நிலையில் உள்ளதால் நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றது எனவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சாட்டியகுடி மாவூர்சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணி 3 இடங்களில் நடைபெறுவதால் தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதையில் கனரக
வாகனங்-கள் செல்லும் அளவிற்கு சாலை அமைக்கப்படா-ததால் கொள்முதல் நிலையத்திற்கு வாகனம் வரவில்லை என சுமைதூக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாற்றுப்பாதையாக நாகலூர் வழியாக செல்லும்போது மின்சார கம்பிகள் வாகனத்--தின் மீது உரசுவதால் பொதுமக்கள் வாகனத்தை இயக்க அனுமதி மறுக்கின்றனர்.
அங்குள்ள நெல் மூட்டைகளை எடுக்க மாவூர் சென்று திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலை வழியாக எடுத்துச் செல்ல வேண்டுமெனில் போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் வாகன
ஓட்டுனர்கள் வர மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதமங்கலம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை தனி கவனம் செலுத்தி நெல் மூட்டைகளை பாதுகாப்பாக
குடோனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.