உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கடற்கரை திருவிழா-கவர்னர் தமிழிசை தொடங்கி வைக்கிறார்

Published On 2022-04-13 15:12 IST   |   Update On 2022-04-13 15:12:00 IST
சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க புதுவையில் 4 இடங்களில் கடற்கரை திருவிழா நடக்கிறது. இதனை கவர்னர் தமிழிசை தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
 
புதுவை வார இறுதி நாட்களில் சுற்றுலா நகரமாக மாறி வருகிறது. புதுவை அரசு நாள்தோறும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் நடந்து சென்று கடல் அழகை ரசித்து வந்தனர்.

கடலில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல்பரப்பு உருவாக்கப்பட்டது. இந்த மணல்பரப்பு சீகல்ஸ் வரை நீண்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். 

இதனால் புதுவையில் பல்வேறு கடற்கரைகள் அரசால் மேம்படுத்தப்பட்டது. சுற்றுலாத்துறையின் சார்பில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 

இவற்றை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் முறையாக கடற்கரை திருவிழாவை சுற்றுலாத்துறை நடத்துகிறது. இந்த 4 நாட்களிலும் காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரீனா, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கு ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் தமிழ் புத்தாண்டையொட்டி கடற்கரை திருவிழாவை மேலும் விமரிசையாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

தமிழ் புத்தாண்டையொட்டி நாளை முதல் 17-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வரதொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கடற்கரை திருவிழாவை அறிவிக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை திருவிழாவுக்கு வரும் மக்கள் வாகனங்களை பழைய துறைமுகத்தில் நிறுத்த வேண்டும். புஸ்சி வீதி சட்டக்கல்லூரி சந்திப்பில் இருந்து கடற்கரை சாலை வரை எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது. 

பாரதி பூங்கா நுழைவு வாயில், ரோமண்ட் ரோலண்ட் வீதியிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார். கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை திருவிழாவில் லேகபே அருகில் படகோட்டி பாடல் மாலை 6 முதல் 6.30 மணி வரை நடக்கிறது. 

கவர்னர் தமிழிசை கடற்கரை திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.  7 முதல் 10 மணி வரை பாண்டி மெரீனாவில் கர்நாடக சங்கீதம், தப்பாட்டம், ஜிம்னாஸ்டிக் நடக்கிறது. காந்தி சதுக்கம் கைவினை அங்காடியில் 7 முதல் 9.30 மணி வரை கடல் உணவு விருந்து நடக்கிறது.

Similar News