உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், சொத்துவரி உயர்வை கண்டித்து, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
ஓசூர்
ஓசூர் மாநகராட்சி கூட்டம், மாமன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கிவைத்து மேயர் சத்யா பேசுகையில், ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, "கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்டவும், சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் உள்ளிட்ட 9 பொருட்களை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைத்து, அவற்றை நிறைவேற்றி ஒத்துழைப்பு தருமாறு, உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சபையில் உறுப்பினர்கள் பேசியதாவது:&
எஸ்.நாராயணன் (அ.தி.மு.க.-மாமன்ற எதிர்க்கட்சி தலைவர்): காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, "டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட வேண்டும். என்றார்.
மேலும், மாமன்றத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜிஆர், ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் படங்களை வைக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ஆணையாளர், விதிமுறைகளை சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூல் செய்வது குறித்தும், சொத்து வரி உயர்வு தொடர்பாகவும், நாராயணன், அ.தி.மு.க. மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தி.மு.கவை சேர்ந்த நிலைக்குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், விளையாட்டு திடலுக்கு கருணாநிதி பெயரை சூட்டுவதற்கும், சொத்து வரி உயர்வுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள், நாராயணன் தலைமையில் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தீர்மான நகல்களை கிழித்து எறிந்து, மன்ற கூடத்தில், தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.க. கவுன்சிலர் பார்வதி நாகராஜ், தர்ணாவில் கலந்துகொண்டார்.
மன்ற கூட்டத்திற்கு நாராயணன் மற்றும் மண்டல தலைவர்கள் இருவரும் கறுப்பு சட்டை அணிந்தும் மற்ற உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். பின்னர் ஜெயப்பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, "மூதறிஞர் ராஜாஜி படித்த பள்ளியின் விளையாட்டு திடலுக்கு, அவரை பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டும், மாமன்ற கூடத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
அ.தி.மு.க வினர் வெளிநடப்பு செய்த நிலையில், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக, மேயர் சத்யா அறிவித்தார். இதனை, தி.மு.க உறுப்பினர்கள் மேஜையை தட்டி, ஆரவாரம் செய்து வரவேற்றனர்.