உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் சமையல் எண்ணை விலை சற்று குறைந்தது

Published On 2022-04-11 11:32 IST   |   Update On 2022-04-11 11:32:00 IST
நடப்பு மாத விலை நிலவரம் இன்னமும் வரவில்லை. வந்த பின் விலையில் மாற்றம் இருக்கலாம்.
திருப்பூர்:

ரஷ்யா -உக்ரைன் போரால் கடந்த பிப்ரவரி  இறுதியில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. மார்ச் இரண்டாவது வாரம் வரை விலை உயர்வு தொடர்ந்தாலும், கடந்த சில நாட்களாக விலை சற்று குறைந்துள்ளது. 

எண்ணெய் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

அதாவது மொத்தமாக வாங்காமல் சில்லறையில் வாங்கி பயன்படுத்துகின்றனர். 

விலை உயர்ந்துள்ளதால் இருப்பு வைக்க பலரும் யோசிக்கின்றனர் என  எண்ணெய் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் எண்ணெய் வியாபாரிகள் சங்க செயலாளர் சம்பத் கூறியதாவது:-

ரீபண்ட் ஆயில் லிட்டர் ரூ.150-ல் இருந்து ரூ.170-க்கு விற்கிறது, சன்பிளவர்ஆயில் ரூ.190-க்கு (பழைய விலை 160 ரூபாய்) விற்கப்படுகிறது. தற்போது தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. லிட்டர் 175-ல் இருந்து 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செக்கில் ஆட்டும் எண்ணெய் விலை பெரிய அளவில் மாறுபடாமல் உள்ளது. தரத்துக்கு ஏற்ப 190 ரூபாய், 220 மற்றும் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எள் எண்ணெய் லிட்டர் 230 ரூபாய் இருந்தது 250 ரூபாயாகியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில், பாமாயில் ஒரு கிலோ 135 ரூபாய். 14 கிலோ எடை கொண்ட ஒரு டின் 1,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உக்ரைன் போர் நடந்த போது கிலோ 65 ரூபாய் வரை உயர்ந்து ஒரு லிட்டர் 190 ரூபாய்க்கும், ஒரு டின்  2,850 ரூபாய்க்கும் விற்றது. 

ஆனால், தற்போது பாமாயில் விலை குறைந்து லிட்டர் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டின் 2,150 ரூபாயாக உள்ளது. மொத்தத்தில், பாமாயில் விலை உயர்ந்து சற்று குறைந்துள்ளது. 

ஆனால் முந்தைய விலை இன்னமும் வரவில்லை. நடப்பு மாத விலை நிலவரம் இன்னமும் வரவில்லை. வந்த பின் விலையில் மாற்றம் இருக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News