உள்ளூர் செய்திகள்
கன மழையால் வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது

வருசநாடு பகுதியில் கன மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து

Published On 2022-04-10 06:24 GMT   |   Update On 2022-04-10 06:34 GMT
வருசநாடு பகுதியில் கன மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
வருசநாடு:

கடமலை-மயிலை ஒன்றியத்தில்  அதிக வெயில் காரணமாக வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. மேலும் விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்தது. எனவே பொதுமக்களும் விவசாயிகளும் மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் பரவலாக அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக நேற்று மாலை வருசநாடு அருகே முருக்கோடை கிராமம் வரை வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. நீர் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து இன்று காலை 9 மணி நிலவரப்படி நீர்வரத்து தங்கம்மாள்புரம் கிராமத்தை வந்தடைந்தது. வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக வருசநாடு மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் முழுமையாக நீங்கியது.  இதற்கிடையே கடும் வெயில் காரணமாக கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காய்ந்த மரங்கள் பசுமையாக தொடங்கி விட்டது. எனவே அடுத்த இரண்டு மாதங்கள் வரை காட்டுத்தீ அபாயம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News