உள்ளூர் செய்திகள்
அளவுக்கு அதிகமாக மதுகுடித்த வாலிபர் சாவு
லாஸ்பேட்டையில் சவ ஊர்வலத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புறம் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். (வயது 27) இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்மனைவி இருவரும் ஊசி பாசி மணி விற்று பிழைப்பு நடத்திவந்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் அம்பிகா என்ற பெண் பாம்பு கடித்து இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த சவ ஊர்வலத்தில் பங்கேற்ற விஜயகுமார் துக்கம் தாங்காமல் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.
பின்னர் வீட்டுக்கு வந்த பிறகும் விஜயகுமார் மீண்டும் மது அருந்தி விட்டு தூங்கினார். சிறிது நேரம் கழித்து அவரது மனைவி பானுப்பிரியா பார்த்த போது கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் சுய நினைவின்றி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜயகுமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.