உள்ளூர் செய்திகள்
சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம்- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
புதுவை சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சட்டப்பேரவையின் செயலருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கியிருந்தது.
இதுநாள் வரை புதுவை சட்டப்பேரவை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 10-ந் தேதி தலைமை செயலர், நிதிசெயலர், சட்டத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தொடர்ச்சியாக கோப்பு தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது. இதன் மேல்நடவடிக்கையாக தலைமை செயலர், நிதித்துறை செயலருடன் கடந்த 7-ந் தேதி கலந்துரையாடினேன்.
அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆணைப்படி புதுவை சட்டப்பேரவை செயலர், துறை தலைவர் நிதி ஆதாரங்களை பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அந்த ஆணையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான புதிய அரசாணை வெளியிடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு முதல் நிதி தொடர்பான கோப்புகளை தலைமை செயலகம், நிதி செயலகத்துக்கு அனுப்பாமல் சட்டப்பேரவை செயலகத்திலேயே செயல்படுத்தப்படும்.
இதனால் காலவிரயம் தவிர்க்கப்படும். புதிய நடைமுறையில் நிதி ஆணைகள், விதிகள் அனைத்தும் தவறாமல் பின்பற்றப்படும்.
இதனால் புதுவை சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் 41 ஆண்டுக்கு பிறகு கிடைத்துள்ளது. ஏற்கனவே சபாநாயகராக இருந்த ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் இதை பெற பல முயற்சிகள் எடுத்தனர். என் முயற்சியில் இது கிடைத்துள்ளது.
வருகிற 11, 12-ந் தேதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு நடக்கிறது. இதில் நான், துணை சபாநாயகர், சட்டசபை செயலர் பங்கேற்க உள்ளோம். வரும் 24-ந் தேதி அமித்ஷா வரும்போது புதிய சட்டசபை கட்ட அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதா? என ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.