உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் அபகரிப்பு- நாராயணசாமி புகார்

Published On 2022-04-09 14:20 IST   |   Update On 2022-04-09 14:20:00 IST
போலி பத்திரம் தயாரித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் அபகரிப்பு குறித்து நாராயணசாமி புகார் செய்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி, ஏப்.9-

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நிலம், வீடு அபகரிப்பு, கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல், விற்பனை, ஆள் கடத்தல், குண்டு வெடிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை சர்வ-சாதாரணமாக நாள்தோறும் நடந்து வருகிறது. 
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடு, நிலம் திட்டமிட்டு போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பத்திரப்பதிவுத்துறை துணையாக உள்ளது. 

எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவருக்கு சொந்தமான இடம் போலி பத்திரம் தயாரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரை விசாரிக்க வேண்டாம் என முதல்-அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பத்திரப்பதிவு செய்ய மாட்டேன் எனக்கூறிய சார் பதிவாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு நீள்ளார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உத்தரவின் பேரில்தான் நில அபகரிப்புகள் நடக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகங்கள் கொள்ளை அலுவலகங்களாக மாறி வருகிறது. 

இதன் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும். புதுவையில் தமிழ் முதன்மை மொழியாகும். பிராந்தியங்களில் மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் உள்ளது. எனவே புதுவை மக்கள் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள். எனவே, அமித்ஷா தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.

மருத்துவ கல்வியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. 

புதுவையில் நான் முதல்-அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினேன். அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன்மூலம் மத்திய பா.ஜனதா அரசு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு விரோதமாக உள்ளது. மருத்-துவக்கல்வி சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது.  

தற்போதைய இணக்கமான கவர்னர் மூலம் இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து ரங்கசாமி பெற வேண்டும். இதை பெறாவிட்டால் அடிமை ஆட்சியைத்தான் ரங்கசாமி நடத்துகிறார் என மக்கள் நினைக்கும் நிலை உருவாகும். 

தனியார் மயம், மின் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பலகட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். ஏழைகளால் தாங்க முடியாத அளவு கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Similar News