உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு

Published On 2022-04-08 10:06 GMT   |   Update On 2022-04-08 10:06 GMT
தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
புதுச்சேரி:

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பளித்தார். 

இதை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்ட வரையறை தயாரிக்கப்பட்டு கவர்னர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதிருந்த கவர்னர் கிரண்பேடி இந்த சட்டவரையறையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளதால் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட அரசியல் கட்சிகளும், பல்வேறு மாணவர் அமைப்புகளும் புதுவையிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சிக்கு உண்மையிலேயே, அரசு பள்ளிகளில் படிக்கும் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? 

அப்படி இருந்திருந்தால், கடந்த 10 மாத ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த அனுப்பப்பட்ட கோப்புக்கு ஒப்புதல் பெற்றிருக்கலாம். இப்போது தமிழக அரசு கொண்டுவந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு ஒப்புதல் கொடுத்துவிட்டது. 

எனவே, புதுவையில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு 10 சதவீத இடஒதுக்கீடு கோப்புகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் புதுவை அரசு மத்திய அரசிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது.
Tags:    

Similar News