உள்ளூர் செய்திகள்
நவீன ஆம்புலன்ஸ் சாவியை டாக்டர் பாமகள் கவிதையிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஒப்படைத்தார்.

நவீன ஆம்புலன்ஸ் சேவை- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-04-08 15:18 IST   |   Update On 2022-04-08 15:18:00 IST
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நவீன ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை சேதராப்பட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு, தமிழக பகுதியான கொண்டிமேடு மற்றும் கடப்பேரிகுப்பம் பகுதியில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் சேதராப்பட்டு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 

இந்நிலையில் இரவு நேரங்களில் திடீரென யாருக்காவது நெஞ்சு வலி ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ பாதிக்கப் பட்டவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கோ அல்லது மற்ற மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல தனியாக ஆம்புலன்ஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 

கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதி பொதுமக்கள் அவசர நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் புதுவை சுகாதாரத் துறை அதிகாரியிடம் அழுத்தம் கொடுத்து சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நவீன ஆம்புலன்ஸ் பெற்றுத் தந்தார். 

இந்த நவீன ஆம்புலன்ஸ் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா சேதராப்பட்டு செங்கழுநீரம்மன் கோவில் திடலில் நடந்தது. 

கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அமைச்சர் சாய்.ஜெ.சரணம்குமார் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவி சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாமகள் கவிதையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகு முன்னிலை வகித்தார். முன்னதாக பா.ஜனதா பிரமுகரும் சேதராப்பட்டு அறங்காவலர் குழுத் தலைவருமான புருஷோத்தமன் தலைமையில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா தொகுதி நிர்வாகிகள், இளைஞர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News