உள்ளூர் செய்திகள்
மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

ஊர்வலமாக எடுத்து சென்று மாணவியின் உடல் அடக்கம்

Published On 2022-04-06 13:47 IST   |   Update On 2022-04-06 13:47:00 IST
நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணி மகள் சுபாஷினி. பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியதால் சுபாஷினி கடந்த 30ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் கடந்த ஒரு வார காலமாக சடலத்தை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் நேற்று நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் பொறுப்பு சுரேஷ் கார்த்தி தலைமையில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாய்&தந்தை, கல்லூரி மாணவிகள் என 9 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற விசாரணைக்கு பிறகு நாகை மாலி எம்.எல்.ஏ தலைமையில் மாணவியின் உறவினர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சடலத்தை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். காவல் உயரதிகாரிகள் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மாணவியின் சடலத்தை நாகையில் இருந்து நாகூர் வரை உறவினர்கள் பேரணியாக எடுத்து சென்றனர்.

கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகை மாலி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதால் உறவினர்களின் ஒருவார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Similar News