உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அதிகளவில் விற்பனையாகும் புகையிலை, குட்கா பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள்

Published On 2022-04-04 15:24 IST   |   Update On 2022-04-04 15:24:00 IST
திட்டச்சேரி பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகும் புகையிலை, குட்கா பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை பகுதிகளிலும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் புகையிலை குட்கா பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இதனால் இளம் வயதில் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உரிமையாளர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திட்டச்சேரி, நடுக்கடை பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் சர்வ சாதாரணமாக புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் படுத்தி வருவதால் இதுபோன்ற குற்றச்செயல்களில் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட எஸ்.பி. ஜவஹர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News