உள்ளூர் செய்திகள்
தீர்த்தவாரியில் கலந்துகொண்ட தருமபுரம் ஆதீனம்.

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி விழா

Published On 2022-04-04 15:23 IST   |   Update On 2022-04-04 15:23:00 IST
திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர்
அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற
வரலாற்று சிறப்மிக்க பிரம்மபுரீஸ்வரர் பெரிய கோவில்
அமைந்துள்ளது. மார்க்கண்டேயர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு நாள்தோறும் சிவபூஜை செய்ய காசி கங்கை தீர்த்தத்தை திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் திருமெய்ஞானம் திருத் தலத்தில்
வரவழைத்துக் கொடுத்து அருளினார்.

பங்குனி மாதம் அமாவாசை கழித்து 3ம் நாள் வளர்பிறை அசுபதி
நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்த கிணறு தோன்றியததாக புராணம்.
அசுபதி தீர்த்தம் உருவாகிய தினத்தில் வருடந்தோறும் அசுபதி
நட்சத்திரத்தில் அசுபதி தீர்த்தவாரி திருவிழா கொண்டாடப்பட்டு
வருகிறது. அந்த வகையில் நேற்று அசுபதி தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி யை முன்னிட்டு பக்த மார்க்கண்டேயர் அஸ்வினி
தீர்த்தத்திற்கு பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து தருமபுரம்
ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கணேஷ்,
மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத
 மந்திரங்கள் ஓத அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம்,
ஆராதனைகள் செய்தனர்.

தொடர்ந்து பக்த மார்க்கண்டேயர் தீர்த்தவாரி நடைபெற்றது.
 இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அசுபதி தீர்த்த
கிணற்று நீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இந்த கிணற்று நீரில் தீர்த்தவாரி அன்று மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News