உள்ளூர் செய்திகள்
காஞ்சி தொண்டை மண்டல 233-வது ஆதீனம்

காஞ்சி தொண்டை மண்டல 233-வது ஆதீனம் ‘திடீர்’ விலகல்

Published On 2022-04-01 15:44 IST   |   Update On 2022-04-01 15:44:00 IST
ஆதினம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல் நலம் கருதி, பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடிதம் கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 233-வது ஆறிழீனமாக திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இந்த மடத்திற்கு திருநெல்வேலி உள்ளிட்ட 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. நிர்வாக குழு உறுப்பினர்களின் ஆலோசனைபடி மடம் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நிர்வாக குழு கமிட்டிக்கும், ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, நிர்வாககுழு கமிட்டிக்கு ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த திடீர் மோதலுக்கு மடத்தின் சொத்துக்களுக்கு வாடகை கட்டணம் நிர்ணயம் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் கூறியதாவது:-

மடத்திற்கு 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சில இடங்களில், சொத்துக்களுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்தேன். நித்யானந்தா சிஷ்யன் எனக்கூறி, மடத்தை கைப்பற்ற நினைத்த சந்தீப் என்பவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரை வெளியேற்றினேன். நான் செய்யும் பணி, நிர்வாக கமிட்டி குழுவுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் செயல்பாடு, மிரட்டல் விடுக்கும் விதமாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கடந்த வாரம் நான் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை, கமிட்டியிடம் கொடுத்தேன். இன்னும் 2 வாரத்துக்குள் மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறும்போது, ஆதினம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் உடல் நலம் கருதி, பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடிதம் கொடுத்துள்ளார். வருகிற 14-ந்தேதிக்கு பின் முடிவு தெரியும் என்றார்.

Similar News