உள்ளூர் செய்திகள்
கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

கழிவு நீரேற்று நிலைய பணிகளுக்கு பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதால் குடியிருப்பு வாசிகள் அச்சம்

Published On 2022-04-01 13:06 IST   |   Update On 2022-04-01 13:06:00 IST
கழிவு நீரேற்று நிலைய பணிகளுக்கு பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதால் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி :

திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர் அருகே உள்ள 40 வார்டுக்கு உட்பட்ட பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர் தேக்கத் தொட்டி அருகில் மாநகராட்சி நிர்வாகமானது சுமார் 50 அடி ஆழத்திற்கு மேல் உள்ள கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் 15 அடிக்கு கீழ் தோன்றும் பொழுது பாறை தென்பட்டதால் கடந்த 4 நாட்களாக பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு வெடிவைத்து தகர்த்து அதில் சுமார் 20 அடி வரை ஆழம் எடுத்துள்ளனர். இவ்வாறு வெடி வைத்து தகர்ப்பதால் அருகே உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் ரெயில்வே பாலம், தேசிய நெடுஞ்சாலை பாலம், மற்றும் 12 கிராமங்களுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சுமார் 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி , ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட 250 வீடுகளும் அருகில் உள்ளது. 

இதனால் இரவு நேரங்களில் வெடிவைத்து தகர்க்கும் போது  அருகே  உள்ள வீடுகளில்அதிர்வு ஏற்படும் நிலையும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வெடி வெடித்து வெளியேறும் புகையினால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

இதற்கு மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமலும், பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த தீர்வு ஏற்படவழி வகைசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News