உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சீர்காழியில் புறவழிச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மீது வழக்கு

Published On 2022-03-31 15:37 IST   |   Update On 2022-03-31 15:37:00 IST
சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்ற 3 தனியார் பஸ்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.
சீர்காழி:

சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலைவழியாக சென்ற 3 தனியார் பஸ்களை வாகன தணிக்கையின்போது ஆய்வு செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதோடு, பயணிகளையும் புறவழிச்சாலையிலேயே இறக்கிவிட்டு செல்வதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர்.

இது குறித்து அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவின்படி, சீர்காழி கோட்டாட்சியர் ஜி.நாராயணன் அறிவுறுத்தலின்படி, மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மேற்பார்வையில், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர்.விஸ்வநாதன் சீர்காழி புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டார்.

அப்போது மயிலாடுதுறையிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பஸ், கடலூரிலிருந்து மயிலாடுதுறை சென்ற தனியார் பஸ் உள்ளிட்ட 3 தனியார் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றுவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 3 பஸ்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டதோடு, மேல் நடவடிக்கைகாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்லும் தனியார், அரசு பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Similar News