உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி தலைமையில் அவரது வீட்டின் முன்பு காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-31 14:47 IST   |   Update On 2022-03-31 14:47:00 IST
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து   நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் எல்லையம்மன் கோவில் தெருவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் தனுசு, நிர்வாகிகள் பழனி, ரவிதேவ் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்தை தட்டுவண்டியில் கட்டி வைத்திருந்தனர். கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பில் சமையல் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் நாராயணசாமி பேசியதாவது:-

 5 மாநில தேர்தலுக்காக 127 நாட்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது புதுவையில் விலை சதமடித்துள்ளது. 

கியாஸ் விலை ரூ.50 உயர்ந்து ரூ.ஆயிரத்தை தாண்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை ரூ.5 லட்சத்துக்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது. 

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை மூலம் ரூ.36 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் எங்கே போனது? என தெரியவில்லை. மத்திய அரசு கஜானாவை காலி செய்து திவாலாக்கி வருகிறது. இதனால் இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் உருவாகும். இதைப்பற்றி ரங்கசாமிக்கு எந்த கவலையும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி கடிதம் எழுதுகிறார். தன் பதவியை காப்பாற்ற ரங்கசாமி மவுனமாக உள்ளார்.

 ரங்கசாமியை வீழ்த்த பா.ஜனதா கங்கணம் கட்டி செயல்படுகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் படலமும் தொடங்கியுள்ளது. சட்டசபை கூடியுள்ள நிலையில் உள்துறை அமைச்சரும், 4 எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். 

அவர்கள் வெளிநாட்டில் எவ்வளவு முதலீடுகளை கொண்டுவந்தார்கள்? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் நிலையை பா.ஜனதா செய்து வருகிறது. அரசியலில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. மக்கள் மத்தியில் மோடி அரசு நம்பிக்கையை இழந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

  ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் அம்பலத்தடையார் மடத்து வீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சீனியர் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். 

காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பிரிவு சுரேஷ்பாபு, ஆர்.டி.ஐ. பிரிவு ராமலிங்கம், மூத்த வக்கீல் சுரேஷ், சிறுபான்மை பிரிவு சார்லஸ், நிர்வாகிகள் ராமலிங்கம், தியாகராஜன், ஜோசப், பிரதீஷ் இருதயராஜ், ராஜ்குமார், சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 
இதேபோல புதுவையில் உள்ள அனைத்து தொகுதிக ளிலும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Similar News