உள்ளூர் செய்திகள்
அறிவிப்பு பலகையை சேதப்படுத்தி சென்ற மர்ம நபர்கள்.

ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Published On 2022-03-30 15:00 IST   |   Update On 2022-03-30 15:00:00 IST
கொள்ளிடம் ஒன்றியத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின்றி இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
சீர்காழி:

சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் குன்னம், நல்லூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 9 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் செயல்பட்டுவருகிறது.

24 மணி நேரம் செயல்படக்கூடிய இந்த சுகாதார நிலையங்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிகள், வயோதிகர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

24மணிநேரமும் இயங்கவேண்டிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர், செவிலியர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில்
 திடீர் காய்ச்சல், விஷ பூச்சிகடி போன்ற அவசர சிகிச்சைப்பெற வரும் கிராமமக்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பூட்டப்பட்டு கிடப்பதால் பல கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இரவில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பூட்டப்பட்டிருக்கும் சுகாதார நிலையங்களால் அலைகழிக்கப்பட்டு அவதி யடைகின்றனர். இந்நிலையில் சீர்காழி அருகேயுள்ள எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியவற்றை நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த இருக்கைகள், ஸ்டெக்சர், அறிவிப்பு பலகை ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இரவு நேர அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை சார்ந்த வர்கள் இவ்வாறு மருத்துவமனை பூட்டப்பட்டு கிடப்பதால் ஆத்திரத்தில் சேதப்படுத்தி சென்றி ருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகையால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர் களை நியமிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News