பொருட்களின் தரம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் நுகர்வோர் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் போசியதாவது:-
வணிக சந்தையில் வாங்கும் பொருட்களின் தரம், பாதுகாப்பு, நியாயமான விலை, உற்பத்தியாளர் குறித்த விவரம், சேவைகள் மற்றும் அதன் விதிமுறைகள் போன்றவை குறித்து நுகர்வோர் அறிந்து அதைப்பயன்படுத்துவது மிக இன்றியமையாதது.
எனவே இது குறித்து விழிப்புணர்வை உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவை இச்சட்டத்தை செயல்படுத்தும் கருவியாக அமைந்துள்ளது.
நுகர்வோர்களுக்கு உரிமைகள் மட்டுமல்லாமல் கடமைகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நுகர்வோர் உரிமைகளையும், கடமைகளையும் நன்கறிந்து விழிப்புணர்வோடு செயல்படுவது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத் ரய்யா, இணைப்பதிவாளர் லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி சங்கர் கலந்து கொண்டனர்.