உள்ளூர் செய்திகள்
ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்கள்

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் நெல்லையில் 2 அரசு பஸ்கள் ஜப்தி

Published On 2022-03-30 05:55 GMT   |   Update On 2022-03-30 05:55 GMT
பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு, பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இன்று நெல்லை பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் இசக்கிராஜா (வயது21). கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விபத்தில் அரசு பஸ் மோதியதில் இசக்கிராஜா பலியானார்.

இது தொடர்பாக அவரது தந்தை துரைராஜ் நெல்லையில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி துரைராஜுக்கு நஷ்ட ஈடாக ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு, வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் ரூ.16 லட்சத்து 67 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் சமரச தீர்வு மையத்தை அணுகினார்கள். கடந்த 11.9.2021 அன்று சமரச தீர்வு மையத்தில் 2 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடாக ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த தொகையை 2 மாதத்தில் கொடுப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். ஆனால் கூறிய அந்த தொகையை கொடுக்கவில்லை. எனவே துரைராஜ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இந்த தொகைக்கு ஈடாக 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று கோர்ட்டு அமினா சிவகுமார் மற்றும் வக்கீல்கள் மாடசாமி, கண்ணன் ஆகியோர் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு விபத்து ஏற்படுத்திய மதுரை டெப்போவுக்கு சொந்தமான நெல்லையில் இருந்து மதுரை செல்லும் ஒரு அரசு பஸ்சும், நெல்லையில் இருந்து தேனி செல்லும் மற்றொரு அரசு பஸ்சும் ஜப்தி செய்யப்பட்டது.

அந்த பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு, பஸ்சை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இன்று நெல்லை பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News