உள்ளூர் செய்திகள்
போராட்டம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக போராட்டம்

Published On 2022-03-29 15:32 IST   |   Update On 2022-03-29 15:32:00 IST
மாமல்லபுரத்திற்கு தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து வரும் அரசு பஸ்கள் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
காஞ்சிபுரம்:

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும். தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று முதல் நாள் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக தொழிற்சங்கத்தினரின் போராட்டம் நடைபெற்றது. எனினும் நேற்றை விட இன்று கூடுதல் அரசு பஸகள் வழக்கம் போல் இயங்கின.

இதனால் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் மட்டும் பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. தனியார் பஸ்களும் முழுமையாக இயங்கியதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

காஞ்சிபுரம் பணிமனை முன்பு தொ.மு.ச. மாநில துணை செயலாளர் ரவி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் சுதாகரன், சுந்தரவரதன், சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் நந்தகோபால், இளங்கோவன், ஐ.என்.டி.யூ.சி., ராமநீராவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கெண்டனர்.

செங்கல்பட்டு பணிமனையில் 84 அரசு பஸ்கள் உள்ளன. இதில் 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. தனியார் பஸ்கள் முழுவதும் இயங்கின. இதனால் அச்சரப்பாக்கம், செய்யூர், கடப்பாக்கம், உத்திரமேரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செங்கல்பட்டு புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரத்திற்கு தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து வரும் அரசு பஸ்கள் குறைக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பஸ் நிலையம், புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 75 சதவீத பஸ்கள் ஓடின. தனியார் பஸ்கள் முழுவதும் இயங்கியது. இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

மணவாளநகர் ஜங்சனில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News