உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரில் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்திட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 33 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அனைவரையும் நகராட்சி கமிஷனர் முருகேசன் வரவேற்றார்.
கூட்டத்தில் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகராட்சி தேர்தலை நடத்திய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நகராட்சியில் அலுவலக பயன்பாட்டிற்கு நகராட்சி தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அமர்ந்து பேசும் வகையில் கூடம், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிட வசதி அமைப்பது, நகர்மன்ற கூட்டங்கள், அவசர கூட்டங்கள் நடத்த தேவையான வசதிகளுடன் கூட்டரங்கு அமைப்பது, நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில் உள்ள, 145 கை பம்புகளுடன் மேலும், 50 புதிய கைபம்புகள் அமைப்பது. சொத்துவரி மற்றும் நிலுவை தொகைகளை வசூலிப்பது, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தை 33.85 லட்ச ரூபாயில் புனரமைப்பது, மற்றும் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம், தினசரி சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், மற்றும் வரிகள் வசூலிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசியதாவது:&
கிருஷ்ணகிரி நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு நகராட்சியை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும். மேலும் நமக்கு நாமே திட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்ட, 6.66 லட்ச ரூபாயில் புதிய கட்டடம் கட்டுவது, ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட, 10 லட்ச ரூபாயில் கிருஷ்ணகிரி நகர வீதிகள் தோறும் ‘சி.சி.டி.வி.’ கேமரா அமைப்பது.
நகர தி.மு.க. செயலாளர் நவாப் வழங்கிய, 6 லட்ச ரூபாயில் இரண்டு உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது. இது போல் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் நகராட்சிக்கு தங்கள் பங்குகளுக்கு நிதிகளை வழங்கி நகராட்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.