உள்ளூர் செய்திகள்
விருதுநகர் பாலியல் வழக்கு: கைதான 4 பேரை காவலில் எடுக்க கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. மனு
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுக்க கோர்ட்டில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகரில் காதலனுடன் இளம்பெண் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இளம்பெண்ணின் காதலன் ஹரிகரன் மற்றும் மாடசாமி, ரவி, ஜூனத் அகமது உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் மைனர் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ. டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேரின் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பி உள்ளனர். பலாத்காரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிகரன், மாடசாமி, ரவி, ஜூனத் அகமது 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்தது.
அதன்படி டி.எஸ்.பி. வினோதி கைதான 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கோர்ட்டு வட்டாரங்கள் கூறின.