உள்ளூர் செய்திகள்
பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதி

அரசு பேருந்துகள் இயங்காததால் தாம்பரம் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-03-28 14:05 IST   |   Update On 2022-03-28 14:05:00 IST
பேருந்துகள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்தனர். இதனால் மின்சார ரெயிலில் வழக்கத்தை விட இன்று கூட்டநெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.

தாம்பரம்:

சென்னையின் நுழைவு வாயிலான தாம்பரத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் பகுதியில் இருந்து அரசு பஸ் மூலம் வேலைக்கு செல்வது வழக்கம் இன்று பேருந்துகள் வேலைநிறுத்தம் காரணமாக தாம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 186 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கியது. இதுபோல் குரோம்பேட்டையில் பணிமனையில் இருந்து 220 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் காலை 16 பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றமே அடைந்தனர்.

இதனால் அவர்கள் அவ்வழியாக வரும் தனியார் பஸ்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன்களில் ஷேர் ஆட்டோக்கள் போன்றவற்றில் கட்டணங்கள் செலுத்தி கடும் சிரமத்துக்கு உள்ளாகி தங்களது அலுவலகங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் வழக்கமாக அழைத்துச் செல்லும் போது பெறக் கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக வசூலிக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பேருந்துகள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணித்தனர். இதனால் மின்சார ரெயிலில் வழக்கத்தை விட இன்று கூட்டநெரிசல் அதிகமாகவே காணப்பட்டது. நாளொன்றுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களை பயன்படுத்திய நிலையில் இன்று பஸ்கள் இயங்காததால் பெரும்பாலான பொதுமக்கள் ரெயிலிலேயே பயன்படுத்த வேண்டி நிலை ஏற்பட்டதால் ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

அரசு பஸ்சை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி அடைந்தனர். இந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வில்லை என்றாலும் பள்ளி சீருடையில் அல்லது பள்ளி கல்லூரி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தது.

இதைப் பயன்படுத்திய ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று வந்தனர். இன்று அரசுப் பஸ்கள் 5 சதவீத மட்டுமே இயங்கும் நிலையில் அரசுப் பஸ்சை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் பள்ளி கல்லூரிக்கு செல்லாமல் அவரவர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Similar News