உள்ளூர் செய்திகள்
குடும்ப பிரச்சினையில் கைதாகி விடுதலை: போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
விருதுநகர் அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் சூலக்கரையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பை சேர்ந்தவர் ராஜீவ் பாண்டி (வயது 42). இவர் ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ராஜீவ் பாண்டிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. ராஜீவ் பாண்டி மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த நிர்மலாதேவி மற்றும் அவரது பெற்றோர் நேற்று ராஜீவ் பாண்டி மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றனர். இதை அறிந்த ராஜீவ் பாண்டி வழியிலேயே அவர்களை மறித்து மனைவியை தாக்கி மிரட்டினார். ஆனாலும் கணவர் மீது நிர்மலாதேவி சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலீஸ் ஏட்டு ராஜீவ் பாண்டியை கைது செய்து நேற்று இரவே ஜாமீனில் விடுவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஜாமீனில் வந்த ராஜீவ் பாண்டி தனக்கு நேர்ந்ததை எண்ணி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சூலக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது ராஜீவ் பாண்டி தூக்கில் பிணமாக தொங்கினார்.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் ஏட்டு தற்கொலை குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.