உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் அபுதாபி பயணம்- நாளை மாலை பிரமாண்ட பாராட்டு விழா

Published On 2022-03-27 10:35 IST   |   Update On 2022-03-27 15:16:00 IST
இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24-ந்தேதி மாலை விமானம் மூலம் துபாய் சென்றார்.

துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துபாயை சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1000 கோடியில் முதலீடு மற்றும் 1200 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் உற்பத்தி திட்டத்தை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதவிர ஆஸ்டர் டி.எம்.ஹெல்த் கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீட்டில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம், ஷெராப் குழும நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ500 கோடி முதலீடு மற்றும் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பது உள்ளிட்ட ரூ.2600 கோடிக்கு முதலீடு செய்ய துபாய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் மொத்தம் 9700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் சி.எம்.ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான கட்டமைப்புகள் அனைத்தும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

துபாயில் தங்கி இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க ‘புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்’ அமைத்து அதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அபுதாபியில் மிகப் பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அங்குள்ள இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும், இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயர் அதிகாரிகள், பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் இருந்து திங்கட்கிழமை இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வந்து சேருகிறார்.




Similar News