உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சொத்து கணக்கு கேட்டு மிரட்டுவதா? நாராயணசாமி ஆவேசம்

Published On 2022-03-26 09:54 GMT   |   Update On 2022-03-26 09:54 GMT
ஊழல் குற்றச்சாட்டு கூறினால் சொத்து கணக்கு கேட்டு மிரட்டுவதா? என நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகஅரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அணை கட்ட ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்னர். 

தமிழக அரசு இதை கண்டித்து, மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

ஆனால் புதுவை அரசு இதை வேடிக்கை பார்த்து வருகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, கர்நாடக பா.ஜனதா அரசிடம் புதுவை அரசு சரணாகதி அடைந்ததாக கருதப்படும். 

ரங்கசாமி தலைமையில் அரசு அமையும்போதெல்லாம் புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் தொடங்கிவிடும். இப்போதும் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிப்பது சர்வ சாதாரணமாக மாறியுள்ளது. 

குண்டுகள் வீசப்படுகிறது. முதல்-அமைச்சர் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களிலும் புரோக்கர்கள் பேரம் பேசுகின்றனர். 

பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு கமிஷன் பெறப்படுகிறது. இந்த அரசு ஊழலில் திளைத்துள்ளது. பள்ளி, கோவில்களுக்கு அருகில் மதுபான கடை அமைக்க ரூ.10 லட்சம் பேரம் பேசப்படுகிறது. 

இவற்றை எடுத்துக் கூறினால் நாராயணசாமி சொத்து கணக்கை காட்டுவாரா? என கேள்வி எழுப்புகின்றனர். 

நான் ஏற்கனவே தேர்தலில் போட்டியிடும்போது என் சொத்துக்கணக்கை தேர்தல் துறையில் சமர்பித்துள்ளேன். வருமான வரித்துறையில் வரி கட்டுகிறேன். 

எனவே சொத்துக் கணக்கை யார் வேண்டுமானாலும் பெற முடியும். என் சொத்து அதிகரித்துள்ளதா? இல்லையா? என தெரிந்து கொள்ளலாம். இதுபோல பல மிரட்டல்களை சந்தித்துள்ளோம். 

இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். சிறிய மாநிலமான புதுவையில் யார் என்ன வேலை செய்கிறார்கள்? என மக்களுக்கு தெரியும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News