உள்ளூர் செய்திகள்
கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதகடிப்பட்டில் 4 வழி சாலை பணிக்கு கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
புதுச்சேரி:
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின் போது சாலை அருகே உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலையின் நடுவே அரசமரத்துடன் ஏழை முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை 4 வழி சாலை பணிக்காக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் இந்தக் கோவிலை அகற்றினால் வேறு இடத்தில் பொதுமக்கள் வழிபடும் வகையில் புதிய கோவிலை அமைத்து தர வேண்டும் என்று முறையிட்டனர்.
தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் இதுகுறித்து தாசில்தாரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்து தங்கள் கோரிக்கையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
அதற்கு பொதுமக்கள் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் இதனை ஏற்கவில்லை.
இதனால் பொது மக்களுக்கும் அதி காரிகள் மற்றும் போலீசாருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை உருவானது.
பின்னர் அதிகாரிகள் பொதுமக்களின் ஆவே சத்தை கண்டு கோவிலை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத் தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.