உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்து சென்னைக்கு பயணிகள்-சரக்கு கப்பல் போக்குவரத்து துறைமுகத்துறை நடவடிக்கை
புதுவையில் இருந்து சென்னைக்கு பயணிகள்-சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க துறைமுகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை துறைமுகத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சரக்கு, கப்பல் போக்குவரத்து செயல்பட்டு வந்தது.
காலப்போக்கில் துறைமுகம் தூர்ந்துபோனதால் இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் புதுவையில் சரக்கு, பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அரசு முடிவெடுத்தது. இதற்காக துறைமுகத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பழைய துறைமுகத்தில் இருந்த குடோன்கள் சீரமைக்கப்பட்டன. துறைமுகத்தின் முகத்துவாரம் தூர்வாரப்பட்டு கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் இருந்து சென்னை, காரைக்கால், அந்தமான் ஆகிய நகரங் களுக்கு பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் துறைமுகத்தை லாபகரமாக இயக்க துறைமுகத்தில் காலியாக உள்ள இடங்களில் சினிமா படப்பிடிப்புகள், அரங்கம் அமைத்து நாடகம் தயாரிப்பு, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவும் முடி வெடுக்கப்பட்டது.
இதையடுத்து புதுவை துறைமுகத்துறை விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுள்ளது. ஒற்றை சாளர முறையில் இவர்களுக்கு அனுமதி வழங்கவும் துறைமுகத்துறை முடிவு செய்துள்ளது.
புதுவையில் இருந்து பயணிகள் கப்பல், சரக்கு கப்பல் இயக்கவும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் தனியார் நிறுவனத்தினர் ஆர்வத்தோடு விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடமிருந்து கடந்த 21-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு புதுவை துறைமுகத்துறை அனுமதி வழங்க உள்ளது.
இதனால் புதுவையில் சுற்றுலா மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மேலும் வளர்ச்சி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.