உள்ளூர் செய்திகள்
நேர்மையான காவலர் தேர்வு: எதிர்கட்சி தலைவரின் பாராட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது-அன்பழகன் அறிக்கை
நேர்மையான காவலர் தேர்வு குறித்து எதிர்க்கட்சி தலைவரின் பாராட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று அன்பழகன் அறிக்கை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி அரசியல் கண்ணோட்டத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் முறைகேடு நடப்பதாக பொய் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்தார்.
காவலர் தேர்வு முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சரும் ஆணையிட்டதன் அடிப்படையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல துறையின் செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நேர்மையாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காவலர் தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்னரே பெரிய ஊழல் நடப்பதாக வழக்கம் போல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தி இருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் நடைபெற்ற காவலர் தேர்வு நேர்மையான, வெளிப்படையாக, ஊழலின்றி நடந்தது என்று பாராட்டியுள்ளார். பா.ஜனதா உள்துறை அமைச்சரை தி.மு.க.வை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் பாராட்டியிருப்பது என்றைக்காவது ஒரு நாள் உண்மை வெளிவரும் என்ற விதத்தில் அவரது பாராட்டு அமைந்துள்ளது.
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.