உள்ளூர் செய்திகள்
புதுவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு- மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தீர்மானம்
புதுவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
புதுச்சேரி:
-
நாடு முழுவதும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து 28, 29-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி வேலைநிறுத்தம், 29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தொழிற்சங்கத்தினர் பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்தது.
எதிர்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், முஸ்லீம் லீக் உமர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 28, 29-ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தம், 29-ந்தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது.
போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வணிகர்கள், கடை வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், லாரி, பஸ் உரிமையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களையும் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாக புதுவை முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இதில் தி.மு.க- காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.