உள்ளூர் செய்திகள்
கேஎஸ் அழகிரி

அண்ணாமலை அரசியல் தமிழகத்தில் எடுபடாது- கே.எஸ்.அழகிரி

Published On 2022-03-25 07:33 GMT   |   Update On 2022-03-25 07:33 GMT
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல் தமிழகத்தில் எந்த வகையிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விருதுநகரில் 22 வயது பெண் சம்பந்தப்பட்ட பலாத்கார வழக்கில் தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் தவறு செய்வோருக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டனையை பெற்றுத் தருவோம் என்று சட்டப்பேரவையில் உறுதி கூறியிருக்கிறார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையை தமிழக டி.ஜி.பி. நேரடியாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர்கள் வினோதினி மற்றும் முத்தரசி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். இதன்மூலம் விசாரணை நியாயமாகவும், துரிதமாகவும் நடைபெறும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எனவே, தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை விருதுநகர் பாலியல் பலாத்காரம் குறித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்கிற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விசாகா குழு அமைக்கப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கருத்து கூறியதாக செய்தி வெளி வந்தது. அதுகுறித்து தமிழக பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக பா.ஜ.க. நடத்துகிற ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பரப்புகிற முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.

தொடர்ந்து நடைபெற்று வருகிற அனைத்து தேர்தல்களிலும் பிரதமர் மோடியையும், தமிழக பா.ஜ.க.வையும் மக்கள் நிராகரித்து வருவதை போல எதிர்காலத்திலும் நிராகரிக்கவே செய்வார்கள். எனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அரசியல் தமிழகத்தில் எந்த வகையிலும் எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News