வத்திராயிருப்பு அருகே மதுபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அத்திகோயில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் வசித்த மூக்கன் என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 22) இவரது தாய்-தந்தை உயிரிழந்த நிலையில் தனியாக அந்த பகுதில் உள்ள உறவினர்களிடம் உணவு சாப்பிட்டு வந்தார்.
மேலும் இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு இவர் மது அருந்திவிட்டு அந்தப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறக்கினர்.
பின்னர் மீண்டும் அந்த வாலிபர் அந்தப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார். இதில் மின்சாரம் தாக்கி ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கூமாபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.