உள்ளூர் செய்திகள்
ஓசூரில் சந்திரசூடேஸ்வார் பல்லக்கு உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தேரோட்ட விழாவையொட்டி பல்லக்கு உற்சவம் நடந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வர் கோவில் தேரோட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம்,தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மின்வாரியம், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், ஒவ்வொரு நாள் இரவில் பல்லக்கு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் பல்லக்கு உற்சவம் நடந்தது. தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், உற்சவமூர்த்தியை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வைத்து, மேள, தாளத்துடன் நகர் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்களும், நாராயணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.